Wednesday, March 20, 2013

அன்புத்தாயே

தாயே உனக்காக ஒருகவிபாட
ஓராயிரம் முறை முயற்சித்தேன்
ஒன்றல்ல இரண்டல்ல பலநூறு வரிகள்
கோர்த்திருப்பேன்
சத்தியமாய் சொல்லுகின்றேன்
ஒவ்வொருமுறையும் தோற்றுப்போகின்றேன்

உனதன்பிற்கும் உன்னரவணைப்பிற்கும்
மட்டுமன்றி
ஊரறிய உலகறிய
என்னை வளர்த்தெடுக்க
நீ பட்ட பாடெல்லாம்
எடுத்துரைக்க
எத்தனை கவி நான் பாட??

நன்றிகூறி கவியெழுத
நான் நினைக்கவில்லை
அன்புத்தாயே - உன்
அருமை பெருமை எடுத்துரைக்க
ஒருகவிதை போதவில்லை
ஆதலால்
அந்த வீண் முயற்ச்சியை
கை விட்டுவிட்டேன்

விபரம் தெரிந்த நாள்முதல்
பல விபரீதங்கள் நினைவிருக்கு
எமக்காய் நீ பட்ட துயருக்கு
இன்னும் உணர்விருக்கு
என்மனதிலே அவையெல்லாம்
ஆழமாய் பதிந்திருக்கு

ஓட்டு விட்டில் வசித்தாலும்
ஒட்டுத்துணி உடுத்த காலம்தனை
நினைவவூட்டி
நிதானமடையச்செய்யும்
உந்தன் வழிகாட்டல்
இன்றுவரை எம்மை
வழி நடத்திக்கொண்டிருக்கு

எழுதப்படிக்க தெரியாத என்தாயே
பிஎச்டி முடித்த ஆசான்களையும்
வென்றுவிட்டாய் - நீ
அவர்களும் தராத மனிதத்தை
நீ என்மனதிலே விதைத்துவிட்டாய்

அன்னையே உன்னையே
எண்ணியே பல தடவை
வியந்திருக்கிறேன்
உந்தன் காலடியிலே
சுவர்க்கம் நிச்சயம் என்பதை
மனதார உணர்ந்திருக்கிறேன்

தரமானவர்களாய் எம்மை
வளர்த்தெடுக்க தாயே நீ
தாங்கும் வேடங்கள் பல
ஆனால் அதில் என்றுமே
நீ நடித்ததுமில்லை - மாறாக
வேடங்களிலும் உயிரோட்டமாய்
வாழும் ஒரு ஜீவன்
இத்தரணியிலேயே நீயே

அருகிலிருக்க ஆசைப்பட்டேன்
ஆனால் விதியின் விளையாட்டில்
தொலைந்து வந்துவிட்டேன்

உலகத்தின் உயிரான
உறவுகள் இரண்டில்
ஒன்றை இழந்துவிட்டேன்
உன்னையும் விட்டு
தொலைதூரமாகிவிட்டேன்


என்னருமை தாயே
என்றென்றும் நான் வேண்டுவது
என்மடியில் உன் தலைசாய்த்து
பணிவிடைசெய்ய
வல்லவன் வழிவகுக்க வேண்டும் அதன்
அருளினாலே எனக்கும்
சுவர்க்கம் சொந்தமாகவேண்டும்